அந்நியத் தொழிலாளர் பிரச்சனைக்குத் தீர்வு! மனிதவள அமைச்சருக்கு நன்றி!

0
1156

கோலாலம்பூர், ஏப்ரல், 26: அந்நியத்தொழிலாளர்கள் பற்றாக்குறை பல ஆண்டு காலமாகவே இந்திய வர்த்தர்களுக்குப் பெரும் சிக்கலாகவே இருந்து வருகிறது. அதிலும், இந்த கோவிட்-19 தொற்றுக் காலங்களில் இந்தப் பிரச்னை மேலும் தலைதூக்கியுள்ளது. இதனால் பல கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல மூடும் நிலையில் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு மைக்கியும், இந்திய மற்றும் இந்திய முஸ்லீம் வர்த்தக அமைப்புகளும் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ மு. சரவணனை அண்மையில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை சமர்பித்தன.

இப்பிரச்னையை நன்கு உணர்ந்த மனிதவள அமைச்சர், அதிக அக்கறையோடு இவ்விவகாரம் தொடர்பாகக் கவனம் செலுத்தி, அந்நியத் தொழிலாளர்கள் பிரச்னைக்குத் தீர்வு கண்டார்.

இதனையடுத்து மைக்கியும் இந்திய மற்றும் இந்திய முஸ்லீம் வர்த்தக அமைப்புகளும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோ ந. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தங்களின் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாத, முறையான ஆவணங்களைக் கொண்டிருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம், உணவகம், ஏற்றுமதி இறக்குமதிக்கான கார்கோ சேவை, துப்புரவுப் பணி, மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் ஆகிய துறைகளுக்குத் தீர்வு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்திய வர்த்தகர்கள் இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அரசாங்கத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து முறையாக விண்ணப்பித்து, இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மைக்கியும் இந்திய மற்றும் இந்திய முஸ்லீம் வர்த்தக அமைப்புகளும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சுக்கு இவ்வேளையில் மனமார்ந்த நன்றியினை தெரிவிப்பதாக அவர் கூறினார். அரசாங்கத்தின் இந்தப் பேருதவி, இந்திய மற்றும் இந்திய முஸ்லீம் வர்த்தகங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்!