தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் கடந்த 2017 நவம்பர் 15-ஆம் திகதி நடைபெற்ற 4-ஆம் உலக தமிழர் பொருளாதார மாநாட்டில் 21 பேராளர்களுடன் கலந்து கொண்ட மலேசிய இந்திய வர்த்தக சங்கங்களின் சம்மேளனம்-மைக்கி தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன், அம்மாநாட்டில், உலக வர்த்தக சந்தை தொடர்பாக உரையாற்றினார். ஆசிய நாட்டு வாடிக்கையாளர்கள், சந்தை பொருளை வாங்கும் சக்தி படைத்தவர்கள். ஆகையால்தான் ஆசியான் பெரிய வர்த்தக சந்தையாக திகழ்கிறது என்ற கருத்தை அவர் முன்வைத்தார். மின்னியல் வர்த்தகத்தை வரவேற்பதோடு, அதை நோக்கி பயணிக்கும் நாடாகவும் மலேசியா திகழ்வதாக அவர் தெரிவித்தார். பல மேம்பாட்டு திட்டங்களுடனும், பல நாடுகளின் முதலீட்டுடனும், மலேசியா தற்போது வர்த்தகத்தில் பீடுநடை போடுவதாக அவர் மேலும் கூறினார். பல நாடுகள் மலேசியாவில் முதலீடு செய்த விவரங்களை மாநாட்டில் அவர் பட்டியலிட்டார்.
‘மலேசியாவில் முதலீடு செய்ய வாருங்கள்’ என மாநாட்டில் கலந்து கொண்ட உலக வர்த்தகர்களுக்கு டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் அழைப்பு விடுத்தார். ஆசிய சந்தை பெரிய வர்த்தக சந்தையாக திகழ்வதாகவும் மலேசியாவை தொடர்பு பாலமாக பயன்படுத்தி கொள்ளுமாறும் அவர் விழைந்தார்.
மாநாட்டுக்கு தலைமை வகித்த சுலு நாட்டு அரசர் Zwelithini kaBhekuzulu-க்கு மைக்கியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் டர்பன் மேயர் Zandile Gumede மற்றும் தமிழ்நாட்டின் தமிழ் மேம்பாட்டு அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரை, டான் ஸ்ரீ கெ.கென்னத் ஈஸ்வரன் நினைவு சின்னம் வழங்கி கெளரவித்தார்.