கோவிட்-19 இல்லாத இடங்களுக்கு CMCO தேவையில்லை!

0
623

2020-ஆம் ஆண்டு சவால் மிக்க ஆண்டாக அமைந்ததோடு, உலகமே கோவிட்19 தொற்று நோயினால் பாதிப்புக்குள்ளாகின தொழில்துறைகளும், தொழில்முனைவர்களும் இதனால் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர்.

இந்நிலையில், 2021- ஆம் ஆண்டும் அதே நிலை தொடர்வதால், வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே கோவிட்-19 தொற்றுப் பரவல் இல்லாத இடங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (CMCO) தேவையில்லை என அரசாங்கத்திடம் மனு கொடுத்திருப்பதாகவும், வர்த்தகர்கள் வியாபாரம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் எனவும் மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோ ந. கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எதிர்வரும் பிப்பரவரி 4-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்ததில் மகிழ்ச்சி என்றாலும், அனைத்து வியாபாரங்களும் செயல்படுவதற்கு அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும்.

நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்ற பெயரில் அரசாங்கம் பல்வேறு நிலையான இயக்க நடவடிக்கைகளை (எஸ்.ஓ.பி) அறிவித்து வியாபாரிகளுக்கு சங்கடம் கொடுக்கக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார். தற்போது அமலில் இருக்கும் நிலையான இயக்க நடவடிக்கை (எஸ்.ஓ.பி) போதுமானது ஆகும்.

நிலையான இயக்க நடவடிக்கைகளை (எஸ்.ஓ.பி) அனைத்து வணிகர்களும் பின்பற்றுகிறார்கள். பொது மக்களும் பின்பற்றுகிறார்கள். எஸ்.ஓ.பி கடைபிடிக்காதவர்களுக்கு அரசாங்கம் அபராதம் கொடுக்கிறது. போலீஸ் படை ரோந்து செய்கிறது. இவை அனைத்தும் இருந்தும், நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மலேசிய முழுவதும் அமல்படுத்துவதன் மூலம் பாதிக்கப்படுவது, வணிகர்கள்தான் என அவர் மேலும் வருத்தத்துடன் தெரிவித்தார்.

CMCO முக்கியம்தான். கோவிட் பரவல் இருக்கும் இடங்களுக்கு கண்டிப்பாக அரசாங்கம் இதை அமல் படுத்த வேண்டும். மலேசிய முழுவதும் இந்தக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவிக்காமல், கோவிட்-19 தொற்றுப் பரவும் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அனைத்து இடங்களுக்கும் இதை அமல்படுத்துவதினால், மக்கள் இன்னும் அச்சம் அடைகின்றனர். பயனீட்டாளர்கள் இல்லாமல் வணிகர்கள் எப்படி வியாபாரம் செய்ய முடியும்? என அவர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் எங்களுடைய கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும். நிலையான வருமானம் இல்லாமல் பல வணிகங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இந்நிலை தொடர்ந்தால், சிறு நடுத்தர வியாபாரங்கள் மேலும் பாதிப்படையும் என அவர் தெரிவித்தார்

இவ்விவகாரம் குறித்து பிரதமர் துறை, அனைத்துலக வாணிப & தொழில்துறை அமைச்சு, உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் விவகார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றத்திற்குக் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்!