நமது நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்காக பிரதமர் பல விதமான திட்டங்களைத் தீட்டி வருகிறார் என மைக்கியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கெ .கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை மைக்கியின் ஏற்பாட்டில் வெஸ்ட் கன்ட்ரி பாராட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்கிய டான் ஸ்ரீ கெ.கென்னத் ஈஸ்வரன், தமதுரையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தில், தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், நாட்டின் ஒவ்
வொரு வரவு செலவு திட்டத்திலும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக மானியத்தையும் ஒதுக்கி வருகிறார் என குறிப்பிட்டார்.வெஸ்ட் கன்ட்ரி பாராட் தமிழ்ப்பள்ளியின் தற்போதைய புதிய தோற்றத்திற்கும் வித்திட்டவர் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் என குறிப்பிட்ட அவர், இப்போது இந்தப் பள்ளியின் புதிய தோற்றத்தினால், மாணவர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
2018 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பிரதமர் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டிற்கு நிச்சயம் சில திட்டங்களை வகுப்பார் என தாம் நம்புவதாக டான் ஸ்ரீ கெ.கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை மாணவர்களுடன் கொண்டாட டான் ஸ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரனும் அவரது துணைவியார் புவான் ஸ்ரீ விவியன் ஈஸ்வரனும் அப்பள்ளிக்கு வருகை அளித்து சுமார் 140 மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கியதோடு விருந்தையும் ஏற்பாடு செய்திருந்தனர். அதோடு, மாணவர்களின் கல்வி சம்பந்தமான உதவிகள் தேவைப்பட்டால், கட்டாயமாக அதற்கு எனது பங்களிப்பை வழங்குவேன் என டான் ஸ்ரீ கெ.கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார்.