கோலாலம்பூர், ஜூன் 4-
இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும், எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இஸ்லாமிய வாழ்வியல் நெறி ஆகும். புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, பொறுமை காத்து, இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் மூழ்கி நோன்பு பெருநாளை வரவேற்கும் இஸ்லாமிய அன்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் தனது இதயப்பூர்வமான நோன்பு பெருநாள் வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் மைக்கியின் தேசிய தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நோன்பு பெருநாளில் இல்லாதோருக்குக் கொடுத்துச் சகோதரத்துவத்தை மேம்படுத்தி அனைவரும் ஒருமித்தக் கருத்தோடு சமமாக நின்று இப்பெருநாளை வரவேற்க வேண்டும். பல இன மக்கள் வாழும் இந்நாட்டில், பெருநாள் காலக்கட்டங்களில் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்து ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழும் பழக்கத்தைக் கடைப்பிடித்தல் அவசியமாகின்றது.
இந்த நோன்புப் பெருநாளானது, ஒரு மாதம் முழுவதும் பெற்ற பயிற்சியையும், கற்றப் பாடத்தையும் தங்களது வாழ்நாளில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்ப, நம் நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை நாம் தொடர்ந்து பேணிக் காக்க வேண்டும். எனவே, அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வுடன், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உணர்வு மேலோங்கி நிற்கும் வகையிலான மனப்பக்குவத்தை நாம் பெற்றிருப்பது அவசியமாகும்.
எனவே, புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து அன்பர்களுக்கும் இதன்வழி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, தொடங்கவிருக்கும் ஷாவால் மாதம் இஸ்லாமிய அன்பர்களுக்கும் வளம் பெருக்கும் மாதமாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துக் கொண்டார்.