பொங்கல் வைத்துப் பொங்கி எழுந்து பிரபாகரனைப் பொங்க வைத்த வர்த்தகர்கள்

0
1726

கோலாலம்பூர்  ஜனவரி-25

மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) ஏற்பாட்டில் மைக்கி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் சுமூகமாகப் பொங்கல் வைத்துக் கொண்டாடிய வர்த்தகர்கள், பிறகு நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பொங்கி எழுந்தனர்.

இது குறித்து, மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் கூறுகையில், அடிமட்ட அதிகாரிகள் முதல், அமைச்சர் வரை  சந்தித்து

மாநில ரீதியில் கலந்துரையாடல் நடத்தி   இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறையை பிரச்னைகளை எடுத்துரைத்தோம்.

அதோடு பிரதமரிடமும்  சென்று மகஜர் வழங்கி விட்டோம் இன்னும் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றார்.

இந்த நாட்டில் உள்ள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாங்கள் எதிர்நோக்கும் பிரச்னை தெரியுமா தெரியாதா? இல்லை தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை என பிரபாகரன் முன்னிலையில் தெரிவித்தார்.

இந்த நாட்டில் இந்தியச் சமுதாயம் வர்த்தகத்தில் முன்னேற வேண்டும் என்று அரசியல்வாதிக்கள் கூறுவார்கள். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கை காட்டுவார்கள் என டத்தோ கோபால் தெரிவித்தார்.

நல்லவேளை மனிதவள அமைச்சர் குலசேகரன்  இத்துறையின் அமைச்சராக உள்ளார். அதனால், அவர் சில முயற்சிகளை எடுக்கிறார். மற்ற அமைச்சர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அமைச்சரவையில்  பேசுறாங்களா? இப்படி ஒரு பிரச்னை அவர்களுக்குத் தெரியுமா என்பதும் தெரியவில்லை. அப்படி உள்ளது நிலைமை.

ஆகையால், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக  நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவேண்டும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனிடையே  வர்த்தகர்களுடன் கலந்துரையாடிய பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பேசுகையில், உங்கள் பிரச்னை உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால், இந்த அரசு புதிய அரசு. பழைய அரசு செய்த தவறுகளை திருத்துவதற்குக் கால அவகாசம் வேண்டும். சில செயல்திட்டங்களைஅரசாங்கம் ஆய்வு செய்துவருகிறது என, பொதுவான அரசியல் கருத்தை வைத்தார்.

இதனையடுத்து, வர்த்தகர்கள் பொங்கி எழுந்தனர். குறிப்பாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் முத்துசாமி பேசுகையில், இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் புதுசு என்ற காரணத்தையே கேட்டுக்கொண்டிருப்பது? இந்த வார்த்தை எப்போது காலாவதி ஆகும் என்றார். எங்களுக்குக் காரணம் வேண்டாம். இந்தத் துறையை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள்? தீர்கமான   முடிவு தேவை.

இது தொழில் சம்பந்தப்பட்ட விஷயம். எவ்வளவு நாள்கள் நாங்கள் பொறுமை காப்பது? அனைவரும் கடைகளை அடைத்துத் தெருவில் நிற்கிறோம். இந்த அரசு சாவகாசமாக ஆய்வு செய்து, முன்னாள் அரசாங்கத்தைக் குறைசொல்லி காலத்தை கடத்துகிறது என்றார்.

எவ்வளவுதான் முயற்சிகள்  எடுப்பது? ஆனால், எல்லா அரசியல்வாதிகளும் சொல்லிவைத்தது போல ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள். இந்த அரசு புதிய அரசு… கால அவகாசம் தேவை… என ஒரேபதிலை திரும்பத் திரும்ப எத்தனை தடவை சொல்வீர்கள்?

இங்கு ஆட்சி மட்டும்தான்  புதுசு. முக்கியப் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்கள் பழுத்த அரசியல்வாதிகள். அவர்கள் நினைத்தால், இந்தப் பிரச்னை தீரும். ஆனால், தீரவில்லை. ஏன் அந்தக் காரபம் தேவை என்றார் முத்துசாமி.

இதற்குப் பதிலளித்த பிரபாகரன் . நீங்கள் சொல்வது  நியாயம். ஆனால், இதற்கான பதில் என்னிடம் இல்லை. அதுவும் உங்களுக்குத் தெரியும் .

மைக்கி தலைவர்  சொன்னது போல் நிச்சயம் நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன் என்றார்.

மலேசிய இந்திய நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. அந்தக் குழுவுடன் வர்த்தகர்களைச் சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்!