போராட்டத்தை கைவிடுவதுதான் விவேகம்! மைக்கி ஆலோசனை

0
1409

கோலாலம்பூர் மே 15-

அன்னிய தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து அரசு பதில் அளிக்கத் தவறினால் போராட்டம் வெடிக்கும் என பாரம்பரிய மற்றும் வர்த்தக சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பில் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. அதனால் போராட்டத்தை முன்னெடுக்காமல் இருப்பதுதான் விவேகமான செயல் என அச்சங்கத்தின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அன்னிய தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக மனிதவள அமைச்சர் நாடு தழுவிய நிலையில் விளக்கம் கேட்கும் கூட்டத்தை நடத்தியது. அதில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து தெளிவாக கூறப்பட்டது. அதோடு இந்த விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர் டான் ஶ்ரீ முகிதின் அசினுடன் பேசப்பட்டது.

இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் இதற்கான ஆய்வு நடத்துவதற்கு மற்றொரு அமைச்சு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால்தான் அன்னிய தொழிலாளர்களைத் அறிவிப்பதற்கான பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகின்றது.

அரசாங்கத்துடன் மல்லுக்கட்டி நாம் எதையும் சாதிக்க முடியாது. ஆனால் நேர் வழியில் சென்று நமது பிரச்சனைகளை எடுத்துரைத்தால் நிச்சயம் தீர்வு காண முடியும் என டத்தோ கோபால் கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய இந்திய வர்த்தகர்கள் அன்னிய தொழிலாளர்கள் இல்லாமல் எதிர்நோக்கும் பிரச்சனைகளை மலேசிய இந்திய வர்த்தக தொழில் சங்கங்களின் சம்மேளனம் தெளிவாக அறிந்து இருக்கின்றது. அவர்களின் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தையும் நாங்கள் புரிந்து கொள்கின்றோம். ஆனால் இப்படிப்பட்ட போராட்டங்கள் எப்படிப்பட்ட எதிர்வினையான விளைவுகளை கொண்டுவரும் என்பது குறித்தும் நாம் யோசிக்க வேண்டும்.

தற்போது எந்த ஒரு விவகாரம் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை இனவாதமாக சித்தரிக்கும் செயல் தொடர்ந்து வருகின்றது. இந்திய வர்த்தகர்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை வைத்து வேறு தரப்பினர் அரசியல் லாபம் தேட கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

வர்த்தகரின் தேவைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். தீபாவளிக்குள் அன்னிய தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கமாக இருக்கின்றது. இன்னும் மூன்று மாதத்திற்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டால் தான் தீபாவளிக்கு மலேசியாவில் உள்ள இந்திய வர்த்தகர்கள் லாபத்தைப் பார்க்க முடியும் என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம்.

அதனால் இப்பிரச்சனைக்கு உடனடியாக எப்படி தீர்வு காண முடியும் என்பதை அறிந்து அதற்கான செயல் திட்டங்களையும் முன்னெடுத்து வருவதாக டத்தோ கோபால் கிருஷ்ணன் தெரிவித்தார். இத்தனை ஆண்டுகள் பொறுமை காத்த இந்திய வர்த்தகர்கள் இன்னும் மூன்று மாதம் காத்திருக்க வேண்டும். அதனால் போராட்டத்தை கைவிடுவது தான் மிகச் சிறந்த செயல் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) துணைத் தலைவர் டத்தோ ராஜசேகரன், செயலாளர் டத்தோ டாக்டர் எ.டி. குமரராஜா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.