மனிதவள அமைச்சின் செயல்பாடு திருப்தியாய் இருக்கிறது… – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்

0
1808

அந்நியத் தொழிலாளர்களை மாற்றுவது தொடர்பான  நடைமுறைகளில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கு மனிதவள அமைச்சர் குலசேகரனுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  மனிதவள அமைச்சின் நடவடிக்கைகளை மைக்கி வரவேற்பதாகவும், உள்ளூர் வர்த்தகர்களுக்கு உதவ சரியான நடவடிக்கை இது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் ஒப்புதல் சான்றிதழ் 14 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்டட சில நாள்கள் என வழங்கி வந்த நிலையில், இப்போது 48 மணி நேரத்திற்குள் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், மனிதவள அமைச்சகம் தனது பொறுப்புகளை நிறைவேற்ற உறுதியுடன் செயல்படும் என்ற நம்பிக்கையைக் கூட்டுவதாகவும், அவர்களின் செயல்பாடு திருப்தியளிப்பதாகவும் அவர் கூறினார்.

முடிதிருத்தும் நிலையம், ஜவுளி, உலோகப்பொருள் மறுசுழற்சி நிலையம், கட்டுமானம், மொத்த மற்றும் சில்லறை வணிகம், நகை வணிகம் – பொற்கொல்லர், பத்திரிகை விநியோகப்பாளர்கள் மற்றும் இதர முடக்கப்பட்ட துறைகளையும் அந்நியத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்க அரசாங்கம் உதவ வேண்டும் என மைக்கி கேட்டுக் கொண்டது.
அந்நியத் தொழிலாளர்கள் பற்றக்குறையால் வியாபாரம் முழுமையாகப் பாதிப்படைந்துள்ளது. மிகுந்த சிரமத்திற்கிடையே இவர்கள் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.
இவ்வனைத்து துறைகளுக்கும் அதிக திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுவதால், அரசு அந்நியத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்க முடக்கப்பட்ட துறைகளை, மறுபடியும் விண்ணப்பிக்க ஆவணம் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதன்தொடர்பாக, நமது பிரச்னைகளை நன்கு அறிந்த மாண்புமிகு மனிதவள அமைச்சர், மாண்புமிகு பிரதமருடனும் உள்துறை அமைச்சருடனும் கலந்து ஆலோசித்து, கூடிய விரைவில் வர்த்தகர்களுக்கு நற்செய்தி கூறவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்!