மைக்கி தலைமையில் 20 வணிக சங்கங்கள் ஒன்றிணைந்து மகஜர் வழங்கும் சந்திப்புக் கூட்டம்

0
1581

கோலாலம்பூர் – இந்திய வணிகர்கள் எதிர்நோக்கும் தொழிலாளர் பிரச்சனைகள் கடுமையாகிக் கொண்டே போகும் நிலையில், அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதில் சிக்கல்களும் தடைகளும் தொடர்ந்து நீடிக்கும் காரணத்தால் இது குறித்து விவாதிக்க மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைமையில் 20 இந்திய வர்த்தக சங்கங்கள் இன்று பிற்பகலில் மைக்கி தலைமையக அலுவலகத்தில் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை நடத்தின.

மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோ என்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த இந்திய வர்த்தக சங்கங்களின் தலைவர்கள் ஒருமித்த குரலில் எதிர்வரும் ஜூன் 11-ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு பிரதமருக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் மகஜர் ஒன்றை வழங்கும் மாபெரும் சந்திப்புக் கூட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

இந்த சந்திப்புக் கூட்டம் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா பள்ளியில் உள்ள கந்தையா மண்டபத்தில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அந்நியத் தொழிலாளர்களை நாட்டிற்குள் தருவிப்பதில் சம்பந்தப்பட்ட மனிதவள அமைச்சர் குலசேகரன், உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின், உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் அமைச்சர் சைபுடின் நசுத்தியோன், பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி, ஆகிய நால்வருக்கும் அழைப்புகள் விடுக்கப்படும்.

மைக்கி மற்றும் 20 இந்திய வர்த்தக சங்கங்கள் இணைந்து தயாரித்திருக்கும் மகஜர் மேற்குறிப்பிட்ட நான்கு அமைச்சர்களுக்கும், பிரதமருக்கும் வழங்கப்படும்.

வர்த்தக சங்கங்களின் தலைவர்களின் குமுறல்கள்
இ்ன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மைக்கி தலைவர் கோபாலகிருஷ்ணனும் மற்ற தலைவர்களும் கடந்த 8 மாதங்களாக இந்திய வணிகர்களுக்கு உதவும் நோக்கில், அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதற்கு தாங்கள் எடுத்து வந்த முயற்சிகள் குறித்தும், அதில் தாங்கள் சந்தித்த இடையூறுகள், பிரச்சனைகள் குறித்தும் தங்களின் மனக் குமுறல்களை வெளிப்படுத்தினர்.

“கடந்த தேசிய முன்னணி அரசாங்கத்திலும் இதே போன்ற பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கினோம். அதற்காகத்தான் பொதுத் தேர்தலின் வழி புதிய மாற்று அரசாங்கத்திற்கு வாக்களித்தோம். இப்போது புதிதாக வந்து பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்திலும் 8 மாதங்கள் போராடியும் தீர்வுகள் கிடைக்கவில்லை. இதனால், பல இந்திய வணிகர்கள் தங்களின் வியாபாரங்களை நிறுத்தி விட்டனர். பல கடைகள் மூடப்பட்டு விட்டன. இருப்பினும் இன்னும் அரசாங்கம் எங்களின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை. அதற்காகத்தான் இறுதிக் கட்ட முயற்சியாக அனைத்து வர்த்தக சங்கங்களும் இணைந்து ஒரே குரல் எழுப்ப இந்த மாபெரும் சந்திப்புக் கூட்டத்திற்கும் மகஜர் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளோம்” என அனைத்து சங்கங்களின் சார்பில் பேசிய கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நகை வியாபாரிகள் சங்கம், உணவகங்களின் சங்கங்கள், மளிகைக் கடை சங்கம், உலோக மறுசுழற்சி உற்பத்தி சங்கம், ஜவுளிக் கடைகளின் சங்கம், போன்ற முக்கிய வர்த்தக சங்கங்களின் தலைவர்களும் தங்களின் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

“தீபாவளி இன்னும் சில மாதங்களில் நெருங்கி வருவதால் தொழிலாளர் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், இந்திய வணிகர்கள் மேலும் கடுமையான பிரச்சனைகளையும் நஷ்டங்களையும் எதிர்நோக்குவார்கள். எங்களின் கடைகளுக்கு உள்நாட்டுத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டுதான் எங்களின் பணிகளை, வணிகங்களை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்ள முடியும். இது இந்தியர்களின் வணிகம் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல. நமது கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையுமாகும். உதாரணமாக, ஓர் இந்தியர் வீட்டுத் திருமணம் என்றால், அதற்கு நகைகள், பட்டு சேலைகள் உள்ளிட்ட ஆடைகள், உணவகங்கள், போன்ற பல அம்சங்கள் தேவைப்படுகின்றன. இந்திய வணிகங்கள் பாதிப்புறுவதால் நமது கலாச்சாரமும் பாதிக்கப்படுகிறது” என அவர்கள் கூறினர்.

“எனவே ஒட்டுமொத்த அந்நியத் தொழிலாளர்களின் பிரச்சனைகளோடு இந்திய வணிகர்களின் தொழிலாளர் பிரச்சனைகளையும் முடிச்சு போடுவது நியாயமல்ல. தடைசெய்யப்பட்டிருக்கும் பிரிவுகளுக்கான தொழிலாளர்களை தருவிப்பதற்கு உரிய வழிமுறைகளை சட்டபூர்வமாக அரசாங்கம் அறிவித்தால், தானாகவே சட்டவிரோதமாக தொழிலாளர்கள் நாட்டில் நுழையும் பிரச்சனைகள் களையப்படும். இப்போது அந்நியத் தொழிலாளர்களைத் தருவிப்பதில் தடைகள் நிலவுவதால்தான் சட்டவிரோதமாக அந்நியத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் வருகிறார்கள் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் வர்த்தக சங்கங்களின் தலைவர்கள் கூறினர்.