கோலாலம்பூர், ஜனவரி 20: MCO உத்தரவு நடைமுறையில் உள்ள இக்காலகட்டதில், பெரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சிறு வியாபாரிகளையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் வியாபாரம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
இந்த MCO காலத்தில் இந்திய ஜவுளி கடைகளுக்கு வியாபாரம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை. ஆனால், பெரிய பெரிய ஆடம்பர உள்ளாடைக் கடைகள், தளவாடக் கடைகள், பேரங்காடிகள், காலனிக் கடைகளுக்கு மட்டும் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டிருப்பது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகளை விதிக்கும்போது, எந்தெந்த துறைகள் இயங்கலாம் என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பட்டியலில், இத்துறை விடுபட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜவுளிக் கடைகளில் துணிகள் மட்டும் என்றில்லாமல், திருமணத்திற்குத் தேவைப்படும் பொருட்கள், இந்துக்களின் வழிபாட்டுக்குத் தேவைப்படும் பொருட்களும் விற்கப்படுகின்றன. அவ்வளவு எளிதாக மற்றப் பல சரக்குக் கடைகளிலும், அன்றாடப் பொருட்கள் விற்கப்படும் கடைகளிலும் இவை கிடைக்காது.
ஜவுளித் துறை தொடந்து செயல்பட அனுமதிக்கப்படாவிட்டால், கண்டிப்பாகப் பல வணிகர்கள் இத்துறையை விட்டே ல் விலக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள் என டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் கூறினார்.
மேலும் உணவகங்களுக்கான விதிமுறைகள் குறித்தும் அவர் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
காலை 6.00 மணி தொடங்கி இரவு 8.00 மணி வரை மட்டுமே உணவகங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது வேலை முடிந்து வீடு திரும்பும் மக்களுக்குப் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இரவு 8.00 மணி வரை மட்டுமே உணவகங்களை செயல்பட அனுமதித்திருப்பது, உணவக உரிமையாளர்கள் மட்டுமல்லாமல், உணவு விநியோகிப்பாளர்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு உணவு கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அன்றாடக் கூலியாக வேலை செய்யும் உணவு விநியோகிப்பாளர்களுக்கு இந்த நேரக் கட்டுப்பாட்டினால் வருவாய் குறையும். மேலும் இரவு 8.00 மணிக்குக் கடையை மூட வேண்டும் என்றால், இரவு 7.00 மணிக்கெல்லாம் அதற்கான தயார் நிலை வேலையையும் கடையைக் கழுவும் பணிகளையும் தொடங்க வேண்டும். எனவே, அதற்கு மேல் உணவு சமைக்க முடியாது. இதனால், கடைகளையே நம்பியிருக்கும் பல வாடிக்கையாளர்களுக்கு இரவு உணவு கிடைக்காத சூழல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்விவகாரங்கள் குறித்து அனைத்துலக வாணிப & தொழில்துறை அமைச்சு, உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் விவகார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றத்திற்குக் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்!