இந்தியர்களின் பிரச்சனைக்கு குரல் எழுப்ப அமைச்சரவையில் ஆள் இல்லை! தீர்வுக்காக வெகுண்டெழுந்தது மைக்கி

0
1757

கோலாலம்பூர் மே 28-

இந்நாட்டில் உள்ள இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் ஆள் பற்றாக்குறை பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புவதற்கு அமைச்சரவையில் ஆள் இல்லை என மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் அயூப்கான் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் வர்த்தகர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனமான மைக்கில் அவசர கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தின் முடிவில் இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கி வரும் அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண, 20 இந்திய வர்த்தக தொழிற்சங்கங்கள் இணைந்து, மாபெரும் கலந்துரையாடலை நடத்தவிருப்பதாக மைக்கியின் தலைவர் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்நாட்டில் உள்ள இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். குறிப்பாக இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மனிதவள அமைச்சு நாடு தழுவிய நிலையில் கலந்துரையாடலை நடத்தியது. அதில் கலந்து கொண்ட இந்திய வர்த்தகர்கள் அந்நிய தொழிலாளர்கள் இல்லாமல் தொழில் துறையை தொடர்வது எவ்வாறான சவால் என்பது குறித்து தங்களுடைய தெளிவான விளக்கங்களையும் வழங்கினார்கள்.

அந்த அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு பிறந்து விடும் என இந்திய வர்த்தகர்கள் காத்திருந்த நிலையில் இன்றளவும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் பலர் தங்களின் வர்த்தகத்தை நிறுத்தக் கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதையும் கோபாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு மைக்கி தொடர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், வர்த்தகர் அனைவரையும் ஒன்றிணைத்து மகஜர் ஒன்றை உருவாக்கி அதனை பிரதமர் உட்பட முதன்மை 4 அமைச்சர்களிடம் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இப் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை அரசாங்கத்தின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்ல வருகின்ற ஜூன் 11 ஆம் தேதி பிரிக்பில்ட்ஸ் கந்தையா மண்டபத்தில் மாபெரும் ஒன்றுகூடல் கூட்டத்தை நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் வர்த்தகர்களின் கருத்துக்களை ஒன்றிணைத்து ஒரு மகஜரும் உருவாக்கி அதனை பிரதமர் உட்பட மனிதவள அமைச்சு, உள்துறை அமைச்சு, உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் மேம்பாட்டு விவகார அமைச்சு ஆகியவற்றிடம் வழங்கவிருப்பதாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தியர்களின் 6 முதன்மை பாரம்பரியத் தொழில் துறைகளில் அந்நிய பணியாளர்களை அமர்த்துவதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. அதனை விலக்கி விட்டு அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படும் தொழில் துறைக்கு அரசாங்கம் பணியாளர்களை வழங்க வேண்டும் என கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

இந்நாட்டில் அடிப்படை உரிமம் இன்றி பல அந்நிய தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால் எங்களுக்கு 50 ஆயிரம் பணியாளர்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள். அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்தால் இன்னும் ஐந்து ஆண்டுகள் வியாபாரத்தை சீராக நடத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அயூப்கான், நடப்பு அரசாங்கத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்புவதற்கு ஆள் இல்லை என கூறினார். எங்களின் பிரச்சனைகளை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதில் மிகப்பெரிய பிரச்சனை எழுகின்றது. இதனால் தீர்வு கிடைக்காமல் பல்வேறு இன்னல்களையும் தாங்கள் சந்திப்பதாக அவர் செய்தியாளர்கள் மத்தியில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த அரசாங்கம் எங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்ற காரணத்திற்காக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தினோம். ஆனால் இன்றும் எங்களின் பிரச்சனைக்கு தீர்வு பிறக்கவில்லை என மலேசிய இந்தியர் உலோக மறுசுழற்சி சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

நாங்கள் அனைவரும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண தனித்தனியாக நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். ஆனால் எந்த தீர்வும் இல்லை. இப்போது அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண முனைப்பு காட்டுகிறோம் என மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் முத்துசாமி குறிப்பிட்டார்.

மலேசிய தமிழ் பத்திரிக்கை விநியோகஸ்தர் சங்கத்தலைவர் டத்தோ முனியாண்டி, மலேசிய சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் சங்க செயலாளர் ராஜேந்திரன், மலேசிய இந்திய நகை வியாபாரிகள் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் உட்பட மலேசியாவில் முதன்மைத் தொழில் துறையைச் சார்ந்த பல சங்கங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.