கோலாலம்பூரில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்யத் தடை – மைக்கி வரவேற்பு

0
1326

கோலாலம்பூர் – “அந்நிய நாட்டவர்கள் 23 வகையான வியாபாரங்களை செய்வதற்கு கோலாலம்பூர் மாநகரம் தடை விதித்ததை மைக்கி மிகவும் வரவேற்கிறது. புதிய அரசாங்கம் வியாபாரிகளின் நலனில் அக்கறை காட்டுவதை இது காட்டுகிறது. இதன் மூலம் நமது வியாபாரிகள் இனி அந்நிய நாட்டவர்களின் தலையீடு இல்லாமல் சுமுகமாக வியாபாரம் செய்ய முடியும். பல அந்நிய நாட்டவரின் வியாபார சீர்கேடுகளுக்கு இது முடிவுக் கட்டும்” என இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்த மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் (படம்), இந்த வரலாற்றுபூர்வ முடிவை எடுத்த கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் பின் அப்துல் சமாட் அவர்களுக்கும் கோலாலம்பூர் மாநகரமன்றத் தலைவர், டத்தோ நோர் இஷாம் பின் டஹ்லான் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

“பல அந்நிய நாட்டவர்கள் மறைமுகமாக நமது வியாபாரிகளின் உரிமங்களைக் கொண்டு வியாபாரங்களில் ஈடுபடுகிறார்கள். கோலாலம்பூர் மாநகர மன்றம் இதனையும் கருத்தில் கொண்டு, அம்மாதிரியான வியாபாரங்களை களையெடுக்கவேண்டும்” எனவும் கோபாலகிருஷ்ணன் மேலும் தனது அறிக்கையில் வலியுறுத்தினார். மலேசியாவில் உள்ள அனைத்து மாநகரங்களும், மாவட்டங்களும் இம்மாதிரியான தடைகளைப் பிறப்பித்து, அந்நிய வியாபாரிகளைத் துடைத்தொழிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

“அண்மையக் காலமாக பலர் வணிகத் திருவிழா எனும் பெயரில் நமது உள்ளூர் வியாபாரிகளை புறக்கணிக்கின்றனர். அந்நிய வியாபாரிகளை வரவழைத்து கல்லா கட்டுகின்றனர். அந்நியர்களுக்கு கடைகளை வாடகைக்கு கொடுத்துவிட்டு, ஒப்புக்கு நமது நாட்டவர்கள் கடைகளை நடத்துவதுபோல் பாவனை செய்கிறார்கள். நாம் இந்நாட்டில் பலகாலமாக வியாபாரம் செய்து அரசுக்கு வரி கட்டுகிறோம். ஆனால் எங்கிருந்தோ வரும் அந்நிய நாட்டவர்கள் நம் நாட்டில் உள்ள சிலருடன் இணைந்து சுலபமாகப் பணம் சம்பாதிக்கின்றனர். பல வியாபாரிகளின் வியாபாரங்கள் இதனால் பாதிப்படைகிறது. அரசாங்கம் இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்” என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.